Tuesday, 15 April 2025

ஆண்களின் தமிழ்ப் பருவப் பெயர்கள்

சித்திரை 2ஆம் நாளிலேயே இந்தளவுக்கு 'வேக்காடு' வே(ர்)த்துப் பூத்து பாடாப்படுத்துதே... அப்படின்னா அக்கினி நட்சத்திரத்துல என்ன போடு போடுமோன்னு தெரியலையே'என்று எமக்காக மட்டுமின்றி பிரபஞ்சத்திற்கும் 'சாண்' அளவே இருந்த 'அடியேன்' 5ய (அஞ்சிய என வாசியுங்கள் சித்தராகிய எம் சீட10000000களே- கோடிகளே. ஐந்து என்பதன் திரிபே அல்லது மரூஉவே அஞ்சு என்பதாம். எனவே, அஞ்சாமல் மேற்கொண்டு  வாசியுங்கள்) நிகழ்வை பகிர்கிறேன்-  'பகீர்' கிறேன்.அண்மையில், ஒரு நண்பன் எனதிருப்பிடம் வந்திருந்தான். 
"என்னடா, ஏதாவது குளிர்ச்சியாகச் குடிக்கிறியா!? இல்ல, சூடா பசும்பால் குடிக்கிறியா!?"  
 "சித்த நேரம் (சித்த நேரம் என்பது கொங்கு மண்டலத்தில் சிறிது நேரம் என்பதன் 3பு - Threeபு - திரிபு) சும்மாயிர்றா சித்தா. நேத்து இந்நேரப் பொழுதுல என்னை படாத பாடு படுத்திட்டான் பாலகன் ஒருவன். இந்த லட்சணத்துல நீயேன்டா பால் பால்னு ராவுடி பண்றே " என வரப்போகும் 'அக்கினி நட்சத்திர'த்தைவிட மேலாக என் மீது எரிந்து விழுந்தான் - மன்னிக்கவும்- எரிந்தான். ஆனால், விழவில்லை. அப்படியே அமர்ந்தபடி அமைந்திருந்தான். பின், பாலகன் நினைவால் பெருமூச்சு விடுத்து கவலை கொண்டான். அவன் கவலை குறித்த அத்தகவலை Youகித்த (யூகித்த) நான் வலை விரித்தேன் இப்படி:- 
"பாலகன்ங்கிறியே. அந்த பாலகனுக்கு எத்தனை வயசிருக்கும்றா?!" 
"என்ற வயசவிட அஞ்சாறு வயசு சின்னவன்டா அவன்."
"அப்டின்னா இப்போ உன்ற வயசு என்றா?"
"உன்ற வயசும், என்ற வயசும் ஒண்ணுதானடா.. அப்படீங்கியிலே, கணக்குப் போட்டுப் பார்றா (உன்ற = உன்றன். என்ற = என்றன் என கொங்கு வட்டார வழக்கு அறிக. இவை போன்றே, உம்முடைய = உம்மட. எம்மட = எம்முடைய என்பனவற்றையும் கொள்க)"
என் வயதைக் கணக்கிடச் சொன்னது கேட்டு அதிர்ந்தேன். அதிர்ந்தேன் என்று செப்புவதுகூட பிழையே. ஏனெனிலோ, அதிர்ந்'தேன்' என்பதில் இனிய 'தேன்' உள்ள'தேன்?' என்று யோசித்ததனால் உளம்தனில் உதிரம் கசிந்'தேன்'. உதிர உடலில் கசந்'தேன்'. இறுதியாக,  இவ்ஐம்புலன் அறிவில் ஒன்று புலப்பட்டது. அஃது,
'குறிஞ்சித் தேன் கசக்குமாமே.. கசந்தபோதிலும் உடலுக்கு  இனிய வாழ்வை தந்திடுமாமே' என நினைத்து  மனம் சாந்தியடையந்தது 
இப்படி இச்சித்து இச் சித்தர் ஆன நான் இருக்கும்போழ்து இம்சித்தார் வெகுஜன பத்திரிக்கைகளில் ஓரிரண்டு வரிகளில் துணுக்கு எழுதுவோர் கவனத்தில் வந்தார். ஆம், துணுக்கு எழுதுவோர்,  என்னை 'துணுக்கு'றச் செய்த செய்தி இதுவேதான்:-
"உலகத்தில் மிக மிகக் கசப்பான கறி (மாமிசம். Non-veg.) மனிதக்கறி தானாம்' 
இதை எந்தப் பரதேசியான நரவுண்ணி சுவைத்தறிந்து- கண்டுபிடித்து கூறினானோ!!? அன்றேல், இத் துணுக்கெழுத்தாளரின் அனுபவமற்ற கேள்வி (செவிவழி கர்ண பரம்பரை)வழிச்செய்தியோ..?!
சமயங்களில்,  இத்தகையோர் தகவல்களில் உண்மைத் தன்மையோ நம்பகமோ இருப்பதற்கு இடமுண்டு. அதே சமயம், மேலெழுதிய 7 சொற்கோர்வைபோல் அல்லாமல் பொய்மைத்தனமும் நம்பகமற்றவையும் இடம்பிடிப்பதை இன்றைய இணையவலையில் வலம் வருகையில் கண்கூடாய் காண்கிறோம். அவ்வாறாய், கண்ணுறும் வேளையிலும் அவற்றை ஐயுற (Eyeயுற எனில் கண்ணுற என்றும், ஐயுற என்றால் ஐயமாகிய சந்தேகமுற வேண்டியதாகவும்) வேண்டாமோ..!? இருக்கட்டும். நல்லது. 
என் வயதும் தன் வயதும் ஒன்றுதானே என்று என்னை அதிர வைத்த நண்பனை மீண்டும் கேட்டேன்.
"பாலகன்னு சொல்றியே.. அவனோட வயசு எத்தனடா?"
"அதான் சொன்னனல்லோ. நம்ம வயசவுட அஞ்சாறு வயசு கம்மியான பொடியன்னு.."
எமதிருவர் வயதையும் அளவிட்டுப் பின், 
"அடப் பைத்தியக்காரா! அப்படினாக்கோ அவன் பாலகன் இல்லடா. அதுக்கும்மீறி.."
"அதென்னமோ.. அவன் பாலகன்தேங்கிறேன்"
"அப்டியாடா கண்ணு.. சாமி! இதக்கேள்றா என் கண்ணு.. தமிழ்ப் பழமைல (பழமை என்பது கொங்கு வழக்கில் சொல்கின்ற சொல்லையும், 'என்ன பழம பேசுற?' எனும்போது "என்ன பேச்சு பேசுறே?!" எனும் சினத்தொனியோடொத்த பிறவுணர்வோடு வழங்கியும் அனுபவப்போக்கில்  பழமொழிகளாயும், மரபார்ந்த மொழி வழக்கங்களையும் மொழியும் இவ்வாறான என்னளவுத் தரவில், பழமை என்பது வழமை என்றோ, வழமை என்பது பழமை என்றோ பழங்கியிருக்க அல்லது வழங்கியிருக்க வேண்டும்) பொம்பளைகளுக்கு அவஅவளுக பருவத்துக்கு தவுந்த (தகுந்த) கணக்கா வகுந்து வச்ச (வகுத்து வைத்த) மாதரி ஆம்பளப் பசங்களுக்கும் இன்னானுக்கு,  இன்னின்ன வயசுக்குரிய அளவுல பிரிச்சு வச்சிருக்கிறாங்கோ. அந்த வகைச்சல்ல இப்போதிக்கு நீ சொல்ற ஆம்பளைப் பையனையும் நம்ம ரண்டு பேர்த்தோட வயசையும் கூட்டிக் கழிச்சுப் பாத்தம்னா அவன் பாலகன் இல்லியாக்கும். ஆமாங்கறேன்..! இத்தன வயசாயி அவன பாலகன்னு சொல்றது தவ்வாது (தகாது)"
"என்றா ஒளர்றே.. நம்மளவிட வயசு சின்னவங்கள பாலகன்னு சொல்லோணும்னுதானே நானும் நெனச்சிருந்தேன். இப்பத்திக்கு (இப்போதைக்கு) நீ என்றான்னா குறுக்க வெலாவோட்றியே.. என்றா (என்னடா) உன்ற பிரச்சென.."
"அதாவுது, கல்யாணம் பண்றதுக்கு உனக்குப் பொண்ணுத் தேடுறாங்க இல்லியாக்கும். அப்டின்னா.. உன்ற வயசு நம்ம நாட்டுச் சட்டம் வரையறை செஞ்சுருக்கிற வயசுக்கு வந்துட்டேனு அருத்தமாவுதா இல்லியா?!"
"ஆமாம்டோவ்"
"இப்ப தெரிஞ்சுக்குடா ராசுப் பையா.. தமிழ் மொழியில ஆம்பளைகளோட வயசு நிலைக்கு தக்கதாக 7 பருவங்களா வகுத்திருக்கறாங்க. இதில  பாலகன்னா ஒண்ணாம் வயசுல இருந்து பன்ரண்டாவது  வயசு (பனிரெண்டாவது) வரைக்குமான ஆங்கொழந்தப் (ஆண் குழந்தைப் பையனைத்தான்) பையனத்தான் சொல்லோணும். புரிஞ்சுதா? கெவனமாச்சா? அத உட்டுப்போட்டு என்ற வயசு, உன்ற வயசு ஆவ மொத்தத்துல நம்ம வயசவுட அஞ்சாறு வயசு எளையவன்னு சொல்லி பாலகன்னு பழம பேசப்படாது" என்று நண்பனுக்கு இம்மட்டும் என்னாலியன்று விளக்கிக் கூறினேன்.
ஆக, 1 முதல் 12 வயதுள்ள ஆண்மகன் பாலகன் எனப்படுவான் என்பது ஆண்களுக்கான தமிழ்ப் பருவப் பெயர்களில் முதன்மையானது. 
இதை நான் கூறி முடித்தபோது,
அடுத்தொரு நண்பன் வந்து சேர்ந்தான். 
"ஆண்டவன் என்னைக் கைவிடலை" என்றான். 
"காளை ஏறிய ககனசிவன் என்னையும் கைவிடலை" என்றே முந்திய நண்பனும் பின் வந்தோன் முன்மொழிந்ததை வழிமொழிந்தான். 
அடுத்து... 
தொடர்வோம்.
விடலைப் பருவம் என்பது ஆணின் தமிழ்ப் பருவப் பெயர்களில் இரண்டாவது ஆகும்.
இவ் விடலைப் பருவம் என்பது 12 வயது தொடங்கி 24 வயது முடியும்வரை  குறிக்கப்பெறும். ஆக, 12 வயது முதல் 24 வயது வரை ஆணின் தமிழ்ப் பருவப் பெயர் விடலை என்பதாகும். இது இரண்டாம் பருவம்.
"காளை ஏறிய ககனசிவன்" என்று சொன்ன நண்பனைப் பார்த்துவிட்டு விடயத்தை விளக்கினேன் பின்வருமாறு..
சோதிடத்தில் பனிரெண்டு இராசிகளில் இரண்டாவது ரிஷபம். ரிஷபம் எனில், காளை அல்லவா.
ஆனால் இதே காளை , ஆணின் பருவப் பெயராக தமிழில் மூன்றாம் நிலையில் வருகிறது. அந்த வகையில் காளை என்பது 24 வயதிலிருந்து 36 வயது ஆன ஆணைக் குறிக்கும்.
    திருத்தி அமைத்தலை அல்லது நீக்கிவிடுதலை (Delete)  இன்று மீள்பதிவு அல்லது மீளமைத்தல் என்று குறிக்கிறார்கள். ஆனால், தமிழில் ஆணுக்கான பருவப் பெயர்களில் மீளி என்பது 36 வயதிலிருந்து 48 வயது வரையானது.
இந்த மீளிப் பருவம் 4ஆம் பருவம்.
இன்னும் ஆணுக்கு 3 பருவங்கள் உள்ளன. அவை?
"கற்பனை என்றாலும் 
கற்சிலை என்றாலும் 
கந்தனே..! 
உனை மறவேன்.."
என்பது தமிழ்வேள் முருகன் பற்றிய அருமையான ஓர் இசைத்தட்டு பாடல் அப்போது நேரம் பார்த்து பண்பலை வானொலியில் ஒலிர்ந்து கொண்டிருந்தது. முன் வந்த நண்பன் தனது அலைபேசியில் திரைச்சித்திரமாய் வைத்திருந்த மருதமலை முருகனை அனிச்சையாய் பார்த்து வணங்கிக் கொண்டான்.
"சவுந்தரான் கொரலுக்கும் இந்தப் பாட்டுக்கும் ஏகப் பொருத்தம்றா சித்தா.. எம்முட்டு அழகா பாடியிருக்காப்ல.." என மெய் சிலிர்த்து பொய்யற்று மெய் புகன்றான்.
இரண்டாவதாய் வந்திருந்த நண்பன், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர விசிறியாய் இன்றும் விளங்குவோன். அவன் முன்னவனின் கருத்து ஒத்து சொன்னான், "ஆமாங்கறேன்.. உம்மையச் (உண்மையை) சொன்னிடா ராசு. இதே டியெம்ஸ் எங்காளு சிவாஜிக்கு படிக்காத மேதை படத்துல 'உள்ளதைச் சொல்வேன்'னு ஆரம்பமாற பாட்டுல 'நன்றியை மறந்தால் 
மன்னிக்க மாட்டேன்  - பார்வையில்
நெருப்பாவேன்'னு பாடியிருப்பாரு. அடேங்கப்பா .. அட்டகாசம்.  அதே படத்துல "ஒரேஒரு ஊரிலே.."னு பாட்டு. அதில, 
"நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளைதானடா! - தம்பி,
நன்றிகெட்ட மகனைவிட
நாய்கள் மேலடா.." அழுவாச்சி வர்ற மாதிரி பாடியிருப்பார். நெனச்சு நெனச்சுக் கேட்கலாம்முடா. அம்மாடி.. என்ன உருக்கமான பாட்டுங்கறே..!"
"ஆமாடா தங்கமே.. ஒருத்தரு செஞ்ச ஒதவிய நன்னியோட (நன்றியோடு) நெனச்சுப் பாக்கோணும்முடா. இல்லாட்டி மனுசராப் பொறந்தவிங்களுக்கு என்ற்றா மருவாதியிருக்குது..!? நீயே சொல்றா சித்தா" என்று என்னை தங்கள் கருத்துக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டான் அவன்.
"மெய்தான்னு நானும் ஒப்புத்துக்கறேன். திருக்குறள்ல பாத்தீங்கன்னா 
'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு' னு திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.  அது ஒரு பக்கமா இருக்கட்டும். நல்லது.. நாம இப்போ சங்கதிக்கு வரலாம். தமிழ்ல மறவோன் அப்படின்னா.."
"மறந்து போறவன்னு அர்த்தம். அப்படித்தானேடா சித்தா"
"அப்படின்னும் அர்த்தம் ஒரு பக்கமிருக்கட்டும். இன்னோரு பக்கம், ஆம்பளைங்களுக்கான தமிழ் பருவப் பெயர்கள்ல 5ஆவதா இருக்கிற பருவமாகும். ஆகக் கூடி, இந்த மறவோன் பருவங்கிறது 48 வயசிலருந்து 60 வயசு வரையுள்ள ஆம்பளை" என்றேன். 
"ஏழு பருவங்கள் ஆம்பளைங்களுக்கு. சரி, இதுவரைக்கும் 5 பருவங்களைத் தெரிஞ்சுகிட்டோம். மிச்சசொச்சமான மத்த ரெண்டு பருவங்கள சட்டுபுட்னு சொல்லிப்போடுறா சித்தா" என ஆவலாய் அவசரம் காட்டி கேட்டனர். 
"6வது திறவோன். இது 60 வயசிலிருந்து 72 வயசு வரைக்குமான ஆணைக் குறிக்கிற தமிழ்ப் பருவப் பெயர். 72 வயசுக்கு மேல தொடர்ந்து வாழ்ற ஆண்களை முதுமகன் அப்படினு சொல்லுவாங்க" என்று சொல்லி முடித்த அதே வேளையில்,
"காள காள (காளை காளை) 
முரட்டுக்காள " என்று மனிதன் திரைப்படப் பாடல் பண்பலையில் ஒலிவலம் வரத் தொடங்க- 
"ஏன்டா சித்தா, இந்தப் படம் வந்தப்போ ரசினிகாந்துக்கு எத்தன வயசிருக்கும்?!" என அறியாக் குழந்தையாய் நண்பர்கள் கேட்க-
நானோ, 
"அவனுக்குத்தான் தெரியும் - ஒரு
ஆரம்பமும் அதன் முடிவும்" என்ற பாடலை மனதில் நிறுத்தி மவுன தியானத்தில் ஆழ்ந்தேன். மத்தியானம் வந்தது.
அன்புடன்,  கம்கோ சித்தர்


ஆண்களின் தமிழ்ப் பருவப் பெயர்கள்

சித்திரை 2ஆம் நாளிலேயே இந்தளவுக்கு 'வேக்காடு' வே(ர்)த்துப் பூத்து பாடாப்படுத்துதே... அப்படின்னா அக்கினி நட்சத்திரத்துல எ...